பிரதமரின் பேச்சுகள் பிரிவினையை ஏற்படுத்தும்: மன்மோகன் சிங் கவலை
பிரதமரின் பேச்சுகள் பிரிவினையை ஏற்படுத்தும்: மன்மோகன் சிங் கவலை
ADDED : மே 30, 2024 03:34 PM

புதுடில்லி: ‛‛ தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியது பிரிவினையை ஏற்படுத்தும்'', என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாக்கப்படும் போது, வளர்ச்சியடைந்த எதிர்காலத்தை காங்கிரசால் மட்டுமே தர முடியும். பஞ்சாப் வாக்காளர்கள் அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு ஓட்டுப்போட வேண்டும்.
இதுவரை எந்த பிரதமரும் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து, வெறுப்பு பேச்சுகளை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசியது இல்லை.தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமரின் பேச்சு பிரிவினையை ஏற்படுத்தும்.
அக்கறை இல்லாமல், பா.ஜ., அரசு அக்னிவீர் திட்டத்தை திணித்துள்ளது. இது, தேசத்திற்கான சேவை, தேசபக்தியின் காலம் 4 ஆண்டுகள் மட்டுமே என அக்கட்சி நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும்.
பஞ்சாபையும், பஞ்சாபியர்களின் கலாசாரத்தையும் பிரதமர் மோடி காயப்படுத்தி உள்ளார். நாட்டிற்கு, பிரதமர் ஏற்படுத்திய காயத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி மருந்தாக இருக்கும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியன சமத்துவமின்மையை பெரிதும் விரிவுபடுத்தி உள்ளது. 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் மக்களின் சேமிப்பு குறைந்துள்ளது. காங்., ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.