பா.ஜ., மத்திய அமைச்சரின் மகன் மீது போக்சோ வழக்கு
பா.ஜ., மத்திய அமைச்சரின் மகன் மீது போக்சோ வழக்கு
ADDED : மே 10, 2026 03:00 AM

ஹைதராபாத்: மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் சாய் பாகீரத், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் பா.ஜ., மூத்த தலைவர் பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவரது மூத்த மகன் சாய் பாகீரத். இவருக்கும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நட்பு ரீதியான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 17 வயது சிறுமியின் தாய், சாய் பாகீ ரத் மீது ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதில், தன் மகளுக்கு சாய் பாகீரத் பாலியல் தொல்லை தந்ததாக கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் சாய் பாகீரத் மீது, ஹைதராபாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த செய்தி பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரீம்நகர் போலீசில் அமைச்சரின் மகன் பாகீரத் சார்பில் பதிலுக்கு ஒரு புகார் தரப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
சிறுமி அறிமுகமான பின், அவரது குடும்ப விழாக்களுக்கு என்னை அழைத்தார். அவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கைக்குரியவர்கள் எனக்கருதி, அவர்களுடன் சில ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றேன்.
அதன் பின், சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் என்னை வற்புறுத்தினர். நான் மறுத்ததால், என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதனால் அச்சமடைந்து அந்த சிறுமியின் தந்தையிடம் 50,000 ரூபாய் கொடுத்தேன். ஆனால், அவர்கள் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். பணம் தராவிட்டால் பொய் புகார் அளிப்போம் என அச்சுறுத்தினர்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
பாகீரத் அளித்த புகாரின் அடிப்படையிலும் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
