முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது... 'போக்சோ' வழக்கு!
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது... 'போக்சோ' வழக்கு!
ADDED : மார் 16, 2024 12:55 AM

பெங்களூரு தன்னுடைய, 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாய் அளித்த புகாரின்படி, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, 'போக்சோ' வழக்கு பதிவாகி உள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்பதாக, எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
:கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர்.
இவர் மீது, பெங்களூரு அக் ஷய் நகரில் வசிக்கும், 43 வயது பெண், சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
என், 17 வயது மகளை ஏற்கனவே ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை
எனக்கு உதவும்படி, கடந்த பிப்., 2ம் தேதி முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டிற்கு என் மகளுடன் சென்றேன்.
ஆறுதல் கூறுவது போல என் மகள் உடலை, எடியூரப்பா தவறாக தொட்டார். அவர் வீட்டின் தனி அறைக்குள் என் மகளை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின்படி, எடியூரப்பா மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம், கர்நாடக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் தயானந்தாவை வீட்டிற்கு வரவழைத்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போலீஸ் நிலையத்தில், பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதுவும் கைப்பட எழுதிக் கொடுக்கவில்லை.
ஏற்கனவே 'டைப்' செய்து கொண்டு வந்துள்ளார். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் அவசரப்பட்டு, எந்த முடிவும் எடுக்க முடியாது. எடியூரப்பா முன்னாள் முதல்வர். இந்த வழக்கு உணர்வுப்பூர்வமானது.
விசாரணை முடியும் வரை எதுவும் சொல்ல முடியாது. புகார் அளித்த பெண் யார் என்றே எங்களுக்கு தெரியாது.
இதனால் அந்த பெண் அளித்த புகாரில், அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக சொல்ல முடியாது. அந்த பெண்ணே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். தேவைப்பட்டால் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூக வலைதளம்
இது தொடர்பாக, எடியூரப்பா கூறியதாவது:
என் மீது புகார் அளித்த பெண், கடந்த ஒரு மாதமாக, அவரது மகளுடன் என் வீட்டின் அருகில் வந்தார். என்னுடன் பேச முயன்றார். ஆனால் நான் அவரிடம் பேசவில்லை.
ஒருநாள் கண்ணீருடன், எனக்கு அநீதி நடந்து விட்டது என, கூறினார். இதனால் அந்த பெண்ணையும், அவரது மகளை யும் வீட்டிற்கு வரவழைத்து விசாரித்தேன்.
அவருக்கு நடந்த அநீதி தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவை, மொபைல் போனில் அழைத்துக் கூறினேன். பணக்கஷ்டம் என, என்னிடம் சொன்னார். இதனால், அவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினேன். அவருக்கு உதவி செய்தேன்.
ஆனால், என் மீதே புகார் அளித்துள்ளார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மீது பதிவான போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால், இந்த வழக்கு பதிவானது என, சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டார்.
எடியூரப்பா மீது புகார் அளித்த பெண், கடந்த 2015 முதல் முக்கிய அரசியல் புள்ளிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் என, 58 பேர் மீது, பல காரணங்களுக்காக போலீசில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பெண், துணை முதல்வர் சிவகுமார், ஆம் ஆத்மி, பா.ஜ., தலைவர்கள், மடாதிபதிகள் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களுடன் எடுத்த படங்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

