UPDATED : பிப் 11, 2025 12:18 AM
ADDED : பிப் 11, 2025 12:09 AM

நாடியாட் : குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நாடியாட் பகுதியில், சோடா குடித்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
நாடியாட் பகுதியை சேர்ந்த கனு சவுகான், 59, என்பவர் சோடா பாட்டிலில் அடைக்கப்பட்ட பானத்தை வாங்கி வந்துள்ளார். அவரும், ரவிந்திரா ரத்தோட், 50, யோகேஷ் குஷ்வா, 40, ஆகியோரும் அதை குடித்த சில நிமிடங்களில் உயிர் இழந்துள்ளனர்.
முதற்கட்ட பரிசோதனை அறிக்கையின்படி, சோடா பாட்டிலில் இருந்த பானத்தில் விஷம் கலந்திருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், மெத்தனால் கலந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனவே, இது கள்ளச்சாராய மரணம் கிடையாது.
உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரி, உள்ளுறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்த பின்பே, மூவரின் மரணத்துக்கான காரணம் தெரியும். அவர்களுடன் இருந்த ஒரு குழந்தை, அந்த பானத்தை அருந்த மறுத்ததால் உயிர் தப்பியுள்ளது. கனு சவுகானுக்கு சோடா பாட்டிலில் அந்த பானத்தை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

