சந்தேஷ்காலியில் போலீசார் அராஜகம் :மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை
சந்தேஷ்காலியில் போலீசார் அராஜகம் :மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை
ADDED : பிப் 16, 2024 01:32 AM

கோல்கட்டா 'மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பலுடன் கைகோர்த்து போலீசார் அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்' என, அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக்.
இவரும், இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை கைப்பற்றியதாகவும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலியைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மாநில பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மயங்கி விழுந்தார்.
இந்நிலையில், சந்தேஷ்காலி பகுதியை சமீபத்தில் ஆய்வு செய்த மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
சந்தேஷ்காலியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் துன்புறுத்தலும் அரங்கேறி உள்ளது அங்கிருப்பவர்களின் வாக்குமூலம் வாயிலாக தெரிய வருகிறது.
சட்டத்தை காப்பாற்றும் போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அதிருப்திகரமான செயலால் மக்கள் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
தங்கள் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு அதிரடிப்படை அல்லது சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர்.
ஆட்சி அதிகாரத்துக்கு பயந்து அதிகாரிகள் அமைதி காக்கின்றனர். கடும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும்.
பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். போலீசார் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்தேஷ்காலியில் நிலவும் சூழலை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அங்கு யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. இழைக்கப்படவும் அனுமதிக்கமாட்டோம். குற்றம் தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தவறான செயலில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,