ரூ.61 கோடி 'ஆன்லைன்' மோசடி: 12 பேரை அள்ளியது போலீஸ்
ரூ.61 கோடி 'ஆன்லைன்' மோசடி: 12 பேரை அள்ளியது போலீஸ்
ADDED : ஆக 24, 2025 01:23 AM

மும்பை: நாட்டின் பல்வேறு பகுதிகளில், 'டிஜிட்டல்' கைது, 'ஆன்லைன்' மோசடிகளில் ஈடுபட்டு, 6௧ கோடி ரூபாய் சுருட்டிய 12 பேரை , மும்பை போலீசார் கைது செய்தனர்.
அப்பாவி பொதுமக்களை, 'மொபைல் போன்' வாயிலாக அழைத்து, சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் பேசி, 'உங்கள் மீது வழக்கு உள்ளது. உங்களை, 'டிஜிட்டல்' கைது செய்கிறோம். அதுவரை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.
'வழக்கு முடியும் வரை உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எங்கள் கணக்குக்கு மாற்றுங்கள்' என, மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நாடு முழுதும் அதிகரித்துள்ளன.
இதற்கு பயந்து சிலர் பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பை புறநகரில் உள்ள காந்திவிலி என்ற இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், நிதி மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் கடந்த 12ல் சோதனை நடத்தினர்.
அப்போது, லேப்டாப்கள், பிரின்டர், 25 மொபைல் போன்கள், 25 வங்கி கணக்கு புத்தகங்கள், 30 காசோலை புத்தகங்கள், 46 'டெபிட் கார்டு'கள், 108 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் தொடர்புடைய வைபவ் படேல், சுனில் குமார் பஸ்வான், அமன்குமார் கவுதம், குஷ்பு சுந்தர்ஜலா, நிதிஷ் பாண்டேகர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
'அவர்கள் சைபர் மோசடிக்கு அந்த அலுவலகத்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதற்காக 943 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் சிம் கார்டுகளை தலா 8,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அதை டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடி உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தியதாகவும் துணை போலீஸ் கமிஷனர் ராஜ் திலக் ரோஷன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பிறரிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டவற்றில் 181 வங்கி கணக்குகள் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு ள்ளன. இதை தொடர்ந்து மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணில் 339 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 14 சைபர் மோசடிகள் மும்பையிலும், மேலும் 12 புகார்கள் மஹாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் பதிவாகிஉள்ளன. இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி மும்பையில் 1.67 கோடி ரூபாய், மஹாராஷ்டிராவின் பிற பகுதிகளில் 10.57 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 61 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.