ADDED : மார் 18, 2025 05:12 AM
விஜயநகர்: லஞ்சம் கொடுக்காததால் தன்னை போலீசார் தாக்கியதாக வாலிபர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் ஈஸ்வர், 24. இவர் கடந்த 13ம் தேதி இரவு பைக்கில், மாகடி சாலையில் உள்ள ஜி.டி., மால் முன் சென்றார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த விஜயநகர் போக்குவரத்து போலீசார் ஈஸ்வரை நிறுத்தினர்.
ஈஸ்வர் மது அருந்தியிருந்தது, சோதனையில் தெரிய வந்தது. இதற்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க போலீசார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க ஈஸ்வர் மறுத்துள்ளார்.
இதனால் அவருக்கு போலீசார், அபராத நோட்டீஸ் கொடுத்தனர். மறுநாள் நீதிமன்றத்திற்கு சென்று, அபராத தொகையை செலுத்தினார். பின், பைக்கை எடுப்பதற்காக விஜயநகர் போக்குவரத்து போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ., சாந்தாராம், போலீஸ்காரர் சித்திக் ஆகியோர், தன்னை தாக்கியதாக ஈஸ்வர் புகார் தெரிவித்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்காததால் ஈஸ்வரை போலீசார் தாக்கியதாக அவரது நண்பர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.