ADDED : பிப் 10, 2025 04:27 AM

ஸ்ரீநகர் : மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தன் மகள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு, ஜம்மு - காஷ்மீர் போலீசார் தடை விதித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கத்துவா மாவட்டத்தின் பிலாவரை சேர்ந்த மக்கான் தின், 25, என்ற குஜ்ஜார் இளைஞரை பயங்கரவாத தொடர்பு சந்தேகத்தில் போலீார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, சித்ரவதை செய்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது.
இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கதுவா மாவட்டத்தில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, போராட்டங்களை நடத்தி வருகிறது.
அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, அவரது மகள் இதிஜா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, தற்கொலை செய்த மக்கான் தீன் வீட்டுக்கு, நேற்று இதிஜா நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இதிஜா முயன்றபோது போலீசார், அவரை தடுத்தனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மெஹபூபா, “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது கூட குற்றமாகிறது. ஜம்மு விருந்தினர் மாளிகையில் போலீசாரால் இதிஜா தடுக்கப்பட்டுள்ளார்.
''ஆனால், ஆளும் தேசிய மாநாடு கட்சியின் அமைச்சர் ஒருவர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார்; இதற்கு மட்டும் தேசிய மாநாட்டு கட்சி அரசு எப்படி அனுமதி அளிக்கிறது என தெரியவில்லை,'' என்றார்.