யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் :பீகார் போலீஸ் சப்-கலெக்டரிடம் சமரசம்
யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் :பீகார் போலீஸ் சப்-கலெக்டரிடம் சமரசம்
UPDATED : ஆக 21, 2024 08:04 PM
ADDED : ஆக 21, 2024 07:37 PM

பாட்னா:இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின் போது, தடியடி நடத்திய போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட வந்த மாவட்டசப் கலெக்டரையும் லத்தியால் தாக்கிய சம்பவம் பீஹாரில் நடைபெற்றது. இதனையடுத்து யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் என சப் கலெக்டரிடம் போலீசார் சமரசமாக செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோரி பல்வேறு தலித் அமைப்புகள் நாடு தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதில் பீஹார் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ( ஆக.,21) போராட்டங்கள் நடைபெற்றன.இதில் பீஹாரில் முக்கிய தலித் அமைப்பான பீமா ஆர்மி என்ற அமைப்பினர் பாட்னாவின் டாக்பங்களாசவுக் என்ற பகுதியில் சாலை மறியல் செய்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு குவிக்கப்பட்ட போலீசார் திடீரென தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர்.அப்போது சம்பவ இடத்தை பார்வையிட வந்த மாவட்ட சப் கலெக்டர் மீதும் போலீசார் லத்தியால் தாக்கினர். இதன் வீடியோ இணைய தளத்தில் வெளியானது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. ராஜிவ் மிஸ்ரா கூறுகையில், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் கேட்காததால் தடியடி நடத்தப்பட்டது. அப்போது துணை கலெக்டர் என்பது கூட தெரியாமல் அவரையும் போலீசார் தாக்கிவிட்டனர். தவறு நடந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.