பண்ணை வீட்டில் போதை விருந்து: பெங்களூருவில் 102 பேர் கைது
பண்ணை வீட்டில் போதை விருந்து: பெங்களூருவில் 102 பேர் கைது
ADDED : நவ 01, 2025 10:06 PM

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவின் புறநகர் பகுதியான தங்கசாகரே கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று(நவ.,01) அதிகாலை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 102 பேரை கைது செய்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினர் என தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் குரூப் மூலம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பலர் கைது செய்யப்படுவது இது முதல்முறை கிடையாது.
கடந்த மே மாதம் பெங்களூருவில் இதேபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டும் போதை விருந்து நிகழ்ச்சி நடத்தி போலீசார் பலரை கைது செய்தனர். இதில், பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

