6 ஆண்டு கோமா வாலிபர் உயிரிழப்பு மருத்துவமனை மீது போலீசார் வழக்கு
6 ஆண்டு கோமா வாலிபர் உயிரிழப்பு மருத்துவமனை மீது போலீசார் வழக்கு
ADDED : ஜன 12, 2024 11:06 PM

பனசங்கரி: டாக்டர்கள் அலட்சியத்தால் கோமாவிற்குச் சென்ற வாலிபர், ஆறு ஆண்டுகளுக்கு பின்பு உயிரிழந்தார். மருத்துவ செலவுக்காக கட்டிய கட்டணத்தை திரும்ப தருவதாக கூறி ஏமாற்றிய, மருத்துவமனை நிர்வாகம் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரு, சுப்பிரமணியநகரில் வசித்தவர் விக்னேஷ், 20. கடந்த 2018ல் இவருக்கு 14 வயது இருந்தபோது, குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவரை பெற்றோர், சுப்பிரமணியநகரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் அலட்சியத்தால், விக்னேஷ்க்கு மூன்று முறை, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சுயநினைவு இழந்த அவர், கோமாவுக்கு சென்றார்.
இதுகுறித்து பெற்றோர், பனசங்கரி போலீசில் புகார் செய்தனர். சுயநினைவு திரும்பும் வரை, விக்னேஷ்க்கு சிகிச்சை அளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது. இதனால் புகார் திரும்ப பெறப்பட்டது. அதன்பின் படுக்கை கட்டணம், மருந்து, மாத்திரை கட்டணம் என கூறி, ஆறு ஆண்டுகளாக விக்னேஷ் பெற்றோரிடம், மருத்துவமனை நிர்வாகம் 19 லட்சம் ரூபாய், வசூலித்து உள்ளது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி, நினைவு திரும்பாமலேயே விக்னேஷ் உயிரிழந்தார். அவரது பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாயை, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். மீதம் 14 லட்சம் ரூபாயை, விரைவில் தருவதாக கூறி இருந்தனர்.
சொன்னபடி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்ட போது, விக்னேஷின் பெற்றோரை மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின்படி, மருத்துவமனை நிர்வாகம் மீது, பனசங்கரி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.