ADDED : ஜன 27, 2025 05:13 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், குடியரசு தின விழாவில் அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றிய போது, மேடையில் நின்றுக் கொண்டிருந்த போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் மயங்கி விழுந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில், நாட்டின், 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது.
மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், காவல் துறையின் அணிவகுப்பை ஏற்று, விழா மேடையில் உரையாற்றினார்.
அப்போது, அதே மேடையில் அவருக்கு பக்கவாட்டில் நின்றுக் கொண்டிருந்த திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ், திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அதிகாரிகள், உடனடியாக அவரை மீட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் வைத்து முதலுதவி அளித்தனர்.
மருத்துவ உதவியை பெற்ற பின், இயல்புநிலைக்கு திரும்பிய போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ், விழா மேடைக்கு மீண்டும் வந்தார்.
இதையடுத்து, குடியரசு தின விழா கொண்டாட்டம் இனிதே நிறைவடைந்தது. வெப்ப வாதத்தால், போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

