ஹிந்து பெண்கள் அவமதிப்பு அதிகாரி மீது போலீசில் புகார்
ஹிந்து பெண்கள் அவமதிப்பு அதிகாரி மீது போலீசில் புகார்
ADDED : அக் 18, 2024 07:34 AM

மங்களூரு: ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்களை பற்றி, அரசு அதிகாரி, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். கொதித்தெழுந்த ஹிந்து அமைப்பினர், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் துணை மண்டல வன அதிகாரி சஞ்சீவ் பூஜாரி. இவர், மூன்று நாட்களுக்கு முன், தன் பேஸ்புக் கணக்கில், 'முஸ்லிம்கள் மற்றவருக்கு உதவி செய்வதில், கை தேர்ந்தவர்கள்' என, புகழ்ந்திருந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் நோக்கில், ஹிந்து அமைப்பு தொண்டர் சுரேஷ் காசரகோடு, அதிகாரி சஞ்சீவ் பூஜாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதிகாரி, 'தட்சிண கன்னடாவில், ஹிந்து மதத்தின் ஒரு லட்சம் பெண்கள் விபச்சாரிகள். இவர்கள் விபச்சாரிகளாக. ஹிந்து அமைப்பின் இளைஞர்கள் காரணம். என்னிடம், 10,000 ஆவணங்கள் உள்ளன' என கூறியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதனால், ஹிந்து அமைப்பினர் கொதித்தெழுந்தனர். ஹிந்து பெண்களை அவமதித்த அதிகாரி சஞ்சீவ் பூஜாரி மீது, போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிடுவதாக எச்சரித்துள்ளனர்.