படப்பிடிப்பில் 'ட்ரோன் கேமரா' சேதம் அமைச்சர் மகன் மீது போலீசில் புகார்
படப்பிடிப்பில் 'ட்ரோன் கேமரா' சேதம் அமைச்சர் மகன் மீது போலீசில் புகார்
ADDED : டிச 01, 2024 04:01 AM

மாகடி ரோடு: படப்பிடிப்பின்போது ட்ரோன் கேமரா உடைந்த விவகாரத்தில், ட்ரோன் டெக்னிஷியன் துாக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அமைச்சர் ஜமீர் அகமதுகான் மகன் ஜெய்த் கான் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான். இவரது மகன் ஜெய்த் கான். இவர், 2022ல் வெளியான பனாரஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது இயக்குனர் அனில்குமார் தயாரிக்கும் கல்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சில காட்சிகளை படம் பிடிப்பதற்காக, பெங்களூரு மாகடி சாலையில் வசிக்கும் ட்ரோன் டெக்னிஷியன் சந்தோஷ், 27, என்பவரின், ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு ட்ரோன் கேமராவை பயன்படுத்தி படம் எடுக்க 25,000 ரூபாய் கட்டணம் என்றும் பேசப்பட்டு இருந்தது.
கடந்த மாதம் 25ம் தேதி சித்ரதுர்காவில் படப்பிடிப்பு நடந்தது. ட்ரோன் கேமராவை பயன்படுத்தி சில காட்சிகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு நடந்த இடத்தில், பெரிய காற்றாடி ஒன்று பறந்தது. “இதனால் டிரோனை பயன்படுத்த வேண்டாம்,” என சந்தோஷ் கேட்டுக் கொண்டார்.
ஆனால் இயக்குனர் அனில்குமாரும், நடிகர் ஜெய்த் கானும் கேட்கவில்லை. டிரோனை வைத்து சில காட்சிகளை படம் பிடித்தனர். அப்போது காற்றாடியில் மோதி, ட்ரோன் கீழே விழுந்து உடைந்தது.
உடைந்த டிரோனுக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து, சந்தோஷிடம், படக்குழு எதுவும் பேசவில்லை. டிரோனுக்குள் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, மெமரி கார்டும் காணாமல் போனது. மனம் உடைந்த சந்தோஷ், நேற்று முன்தினம் மாகடி ரோட்டில் உள்ள, வீட்டில் வைத்து துாக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜெய்த் கான், அனில்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீது, மாகடி ரோடு போலீசில், சந்தோஷ் குடும்பத்தினர் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.

