சிறுகடைகளில் ஆய்வு செய்ய போலீஸ் முடிவு தீ விபத்தை தடுக்க நடவடிக்கை
சிறுகடைகளில் ஆய்வு செய்ய போலீஸ் முடிவு தீ விபத்தை தடுக்க நடவடிக்கை
ADDED : ஏப் 04, 2025 10:21 PM
புதுடில்லி,:தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும், தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது குறித்து அனைத்து சிறிய அளவிலான கடைகளிலும் போலீசார் ஆய்வு செய்ய டில்லி மாநகரப் போலீஸ் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பெரிய அளவிலான தீ விபத்துகள் டில்லி மாநகரில் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
வடகிழக்கு டில்லி ஜாப்ராபாத்தில் நேற்று முன் தினம் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜாவேத்,29, என்பவர் உயிரிழந்தார்.
போலீசின் புள்ளிவிபரப்படி, தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. அவற்றில் பல கடைகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. தீப்பற்றினால் அதைச் சமாளிக்க போதுமான உபகரணங்களும் பொருத்தப்படவில்லை.
சட்டவிரோதமாக இயங்கும் மற்றும் அடிப்படை தீயணைப்பு நடைமுறைகளைக் கூட பின்பற்றாத கடைகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அடிப்படை தீயணைப்பு கருவிகளை பொருத்த அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி தீயணைப்புத் துறை புள்ளிவிபரப்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,204 இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு, 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரியில், 992 விபத்துக்களில் 16 பேரும், மார்ச் மாதம் ஆறு பேரும் இறந்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த ஆண்டு தீ விபத்து கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 938 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு ஆறு பேரும், பிப்ரவரியில் 1,076 இடங்களில் தீப்பற்றி இரண்டு பேரும், மார்ச் 11ம் தேதி வரை 455 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், டில்லி அரசின் பொதுப்பணித் துறையினர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வறிக்கையை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.