கேரளாவில் சமாதி அடைந்தவரின் உடலை தோண்டி எடுத்த போலீசார்
கேரளாவில் சமாதி அடைந்தவரின் உடலை தோண்டி எடுத்த போலீசார்
ADDED : ஜன 17, 2025 12:45 AM

திருவனந்தபுரம், கேரளாவில், சமாதி அடைந்த சாமியாரின் இறப்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அவரது உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாட்டிங்கராவில் உள்ள கவுவிளக்கம் பகுதியில் கோபன் சுவாமி, 69, என்பவர் வசித்து வந்தார்.
இவர், ஜீவ சமாதி அடைந்ததாக இவரது மகன்கள் அந்த பகுதியில் கடந்த 10ம் தேதி போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
சந்தேகம்
இதையடுத்தே, இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தனியார் 'டிவி'க்கு பேட்டியளித்த அவரது மகன் ராஜசேனன், 'தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், நள்ளிரவு நடந்தே சென்று என் தந்தை ஜீவ சமாதி அடைந்தார். என் உடலை யாரும் பார்க்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதால், அது குறித்து வெளியே தெரிவிக்கவில்லை' என, கூறியிருந்தார்.
அவரது பதிலும், ஜீவ சமாதி அடைந்த இடத்தில் கோபன் சுவாமிக்கு அவசர அவசரமாக நினைவு மண்டபம் எழுப்பப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கோபன் சுவாமி மாயமானதாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக, ஆர்.டி.ஓ., உத்தரவுடன் கடந்த 13ம் தேதி கவுவிளக்கம் சென்ற போலீசாருக்கு, உடலை தோண்டி எடுக்க கோபன் சுவாமி குடும்பத்தினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், எதுவும் செய்ய முடியாமல் போலீசார் திரும்பி வந்தனர்.
விசாரணை
இந்த சூழலில், நினைவு மண்டபத்தை இடித்து உடலை எடுத்து விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி கோபன் சுவாமி குடும்பத்தினர், கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
'இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுவதால், போலீசார் விசாரணையில் தலையிட முடியாது' எனக் கூறி, அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோபன் சுவாமியின் உடல், திருவனந்தபுரம் சப் - கலெக்டர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
அமர்ந்த நிலையில் இருந்த உடல், கோபன் சுவாமியின் உடல்தான் என அடையாளம் காணப்பட்டது. விபூதி, உத்திராட்சம் உள்ளிட்ட பூஜை சாமான்களும் அவர் உடலருகே இருந்தன.
உடனடியாக, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சப் - கலெக்டர் ஆல்பிரட், “போலீசார் விசாரணையை தொடரும் நிலையில், உடற்கூறாய்வுக்கு பின், கோபன் சுவாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்,” என தெரிவித்தார்.