கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்; போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்
கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்; போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்
ADDED : டிச 09, 2024 03:16 AM

ஷம்பு : ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில், எட்டு விவசாயிகள் காயமடைந்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப் படும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை முன்வைத்து, 'டில்லி சலோ' அதாவது, 'டில்லி செல்வோம்' என்ற போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லையான ஷம்புவில், விவசாயிகள் மீண்டும் துவக்கி உள்ளனர்.
போராட்டத்தை தொடர்ந்து, டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி, ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் செல்ல முயன்றனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக விவசாயிகள் கைவிட்டனர்.
இந்நிலையில், ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மீண்டும் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றனர்.
இதனால், விவசாயிகள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த மோதலில் எட்டு விவசாயிகள் காயமடைந்தனர். இதனால், ஷம்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதன்பின், பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், ''அமைதியாக போராடிய எங்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ''இதில், எட்டு விவசாயிகள் காயமடைந்தனர். எங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்,'' என்றார்.