இளம்பெண்ணிடம் அத்துமீறல் விவகாரத்தை கோட்டை விட்ட போலீஸ்! : 2 சாலைகளில் மட்டும் ரோந்து போனதால் விபரீதம்
இளம்பெண்ணிடம் அத்துமீறல் விவகாரத்தை கோட்டை விட்ட போலீஸ்! : 2 சாலைகளில் மட்டும் ரோந்து போனதால் விபரீதம்
ADDED : ஜன 02, 2025 06:25 AM
பெங்களூரு நகரின் மையப்பகுதியான பிரிகேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான 'பப்'கள் செயல்படுகின்றன. ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வார இறுதி நாட்களின் மாலை நேரம் 'பப்' வந்துவிடுவர். இரவு 1:00 மணி வரை மதுகுடித்து, டி.ஜே., பாடலுக்கு ஆட்டம் போட்டுவிட்டு செல்வர்.
ஆண்டுதோறும் புத்தாண்டு பிறக்கும்போது, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகரில் உள்ள 'பப்'கள் நிரம்பி வழியும். புத்தாண்டை கொண்டாட டிசம்பர் 31ம் தேதி மாலையில் இருந்தே, வாலிபர்கள், இளம்பெண்கள் கூட்டம், கூட்டமாக வர துவங்குவர்.
கடந்த 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் நிறைய இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்கள், பெங்களூருக்கு தலைகுனிவை ஏற்படுத்தின.
பரபரப்பு
மதுபோதையில் இருந்த ஒரு பெண்ணை சூழ்ந்து கொண்டும், இன்னொரு பெண்ணை விரட்டி, விரட்டி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2018, 2019 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்.
கடந்த 2020, 2021, 2022ல் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் 2023ல் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கிய நிலையிலும், உருமாறிய கொரோனா என்ற பீதியால் பெரும்பாலோனோர் வீடுகளில் இருந்து வெளியே வரவே இல்லை.
ஆனால் 2024 டிசம்பரில் கொரோனா என்ற பெயரையே, அனைவரும் மறந்துவிட்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசும் எந்த தடையும் விதிக்கவில்லை.
பாதுகாப்பு
எனவே ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த 'பப்'களை நோக்கி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியில் இருந்தே, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவுக்கு வாலிபர்கள், இளம்பெண்கள் படையெடுக்கத் துவங்கினர். பாலியல் தொல்லை சம்பவங்களை கருத்தில் கொண்டு, அந்த இரண்டு பகுதிகளை சுற்றி 11,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரண்டு பகுதிகளை சுற்றிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இதனால் பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் எந்த அசம்பாவிதமும் இன்றி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
ஆனால் மற்ற பகுதிகளை கண்காணிக்க போலீசார் தவறியதால், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்துள்ளது.
கையை பிடித்து...
மாரத்தஹள்ளி அருகே காடுபீசனஹள்ளியில் வசிக்கும் 25 வயது இளம்பெண், புத்தாண்டை வரவேற்க நேற்று முன்தினம் இரவு தன் தோழிகளுடன் 'பப்'க்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு வாலிபர் குடிபோதையில், இளம்பெண்ணை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையடுத்து சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என, பப் நிர்வாகத்திடம், இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மாரத்தஹள்ளி போலீசார் 'பப்'க்குச் சென்று, இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த புகாரின்பேரில் அடையாளம் தெரியாத வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
இதுபோல பெல்லந்துாரில் 'பப்' ஒன்றில் தன் காதலனுடன் புத்தாண்டை கொண்டாட வந்த இளம்பெண்ணிடம் சென்று, குடிபோதையில் இருந்த வாலிபர், மது அருந்தும்படி தொல்லை கொடுத்தார்.
இளம்பெண் மறுத்ததால் அவரை பிடித்து இழுத்து, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். பப் ஊழியர்கள் வந்ததால், வாலிபர் தப்பினார்.
இரண்டு இடங்களில் இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள் நடந்த போதிலும், “புத்தாண்டு கொண்டாட்டம் எந்த பிரச்னையும் இன்றி நல்லபடியாக முடிந்தது,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி சமாளித்துள்ளார்.
மேற்கண்ட சம்பவங்களால், நகர போலீஸ் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இரண்டு இடங்களில் கவனம் செலுத்தி, மற்ற இடங்களில் போலீஸ் கோட்டை விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

