சர்ச்சை பேச்சு குறித்து காங்., தலைவர் ஹரிபிரசாத்திடம் போலீசார் விசாரணை!: இங்கு ஆர்.எஸ்.எஸ். அரசு நடக்கிறதா என பாய்ச்சல்
சர்ச்சை பேச்சு குறித்து காங்., தலைவர் ஹரிபிரசாத்திடம் போலீசார் விசாரணை!: இங்கு ஆர்.எஸ்.எஸ். அரசு நடக்கிறதா என பாய்ச்சல்
ADDED : ஜன 20, 2024 06:04 AM
பெங்களூரு: 'ராமர் கோவில் திறப்பு விழா அன்று, கோத்ரா போன்று கலவரம் நடக்கும்' என கூறி நெருக்கடியில் சிக்கிய, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், தற்போது சி.சி.பி., விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதனால், தன் கட்சி அரசின் மீதே அவர் வெகுண்டெழுந்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்தபோது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் எதிர்பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. மேலிட அளவில் முயற்சித்தும் பயனில்லை. இதனால் முதல்வர் சித்தராமையா மீது, ஹரிபிரசாத் எரிச்சலில் உள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
அவ்வப்போது, 'என்னால் முதல்வரை அமர்த்தவும் முடியும்; பதவியில் இருந்து நீக்கவும் முடியும்' என, மறைமுகமாக சித்தராமையாவை மிரட்டும் வகையில் பேசி வந்தார். தன் ஆதரவாளர்களுடன், ரகசிய கூட்டம் நடத்தி முதல்வரின் வயிற்றில் புளியை கரைத்தார்.
ஈடிகர் சமுதாய மாநாடு நடத்தி, தன் சக்தியை காண்பிக்க முயற்சித்தார். முதல்வரை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஹரிபிரசாத் வாய்க்கு பூட்டு போடும்படி, முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தீவிரமாக கருதிய மேலிடம், 'லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் அல்லது அரசை பற்றி விமர்சித்து, தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது' என, ஹரி பிரசாத்துக்கு கட்டளையிட்டது.
இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், மறைமுக எச்சரிக்கை விடுத்தது. அதன்பின் ஹரிபிரசாத் மவுனமாக இருந்தார்.
கலவரம் அபாயம்
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் குறித்து விமர்சிக்கும் அவசரத்தில், 'ராமர் கோவில் திறப்பு விழா அன்று, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததை போன்று, அயோத்தியில் நடக்க வாய்ப்புள்ளது' என ஹரிபிரசாத் கூறினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
'ஹரிபிரசாத் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும்போது, கலவரம் நடக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அவருக்கு தகவல் தெரிந்திருக்கக் கூடும். அவரிடம் விசாரணை நடத்த வேணடும்' என, பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். போலீசாரிடமும் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவுக்கு அரசு மாற்றியது. விசாரணையை தீவிரப்படுத்திய சி.சி.பி., அதிகாரிகள், ஹரிபிரசாத்திடம் நேற்று விசாரணை நடத்தினர்.
ஆழ்நிலை விசாரணை
பெங்களூரின், கே.கே.கெஸ்ட் ஹவுசில் அவரிடம் கேள்விகள் எழுப்பி, பதில் பெற்றனர். தன்னிடம் விசாரணை நடத்த சி.சி.பி.,க்கு, அரசு அனுமதி அளித்ததால், ஹரிபிரசாத் கொதிப்படைந்து உள்ளார்.
விசாரணை முடிந்த பின், அவர் கூறியதாவது:
இது காங்கிரஸ் அரசா அல்லது ஆர்.எஸ்.எஸ்., அரசா? தேவையென்றால் என்னை கைது செய்யுங்கள். வி.வி.ஐ.பி., சலுகைகள் எனக்கு தேவையில்லை. நான் எந்த அரசில் இருக்கிறேன் என்பதே தெரியவில்லை.
என்னை ஆழ்நிலைக்கு கொண்டு சென்று, விசாரணை நடத்தும்படி அதிகாரிகளிடம் கூறினேன்.
வாரண்ட் கொண்டு வந்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தட்டும். என்னுடன் சேர்த்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவையும் ஆழ்நிலைக்கு கொண்டு சென்று விசாரிக்க வேண்டும். கட்சியில் என்னை போன்ற தலைவருக்கே, இந்த நிலை என்றால் தொண்டர்களின் கதி என்ன?
பணியமாட்டேன்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கல்லட்கா பிரபாகர் பட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு, நான் பணியமாட்டேன்.
ராமர் கோவிலுக்கு செல்வோருக்கு, அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, அப்படி கூறினேன். இப்போதும் அதையே கூறுகிறேன். அதில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.