போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்
போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்
ADDED : ஜூன் 20, 2025 08:45 PM
புதுடில்லி:'டில்லியில், இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2.3 லட்சம் ரசீதுகள், வழங்கப்பட்டுள்ளன' என, போக்குவரத்து துறை சிறப்பு கமிஷனர் அஜய் சவுத்ரி கூறினார்.
டில்லியில் அவர் கூறியதாவது:
சில சுறுசுறுப்பான வழித்தடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, அந்த பகுதியில் சிலரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து விதி மீறல் தான் காரணம். அதை அறிந்து, அந்த சாலையை பயன்படுத்துவோருக்கு அவ்வப்போது அறிவுறுத்தல் செய்து வருகிறோம்.
குறிப்பாக, இ-ஆட்டோ ரிக் ஷாக்களை இயக்குபவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். அந்த வகையில், சாலையில் பார்க்கிங், நுழைய கூடாத வழியில் நுழைதல், உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக, 2.30 லட்சம் ரசீதுகள் இ-ரிக் ஷா ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து குற்றங்களுக்காக இதுவரை, 1, 260 இ-ரிக் ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நபர்கள், உரிமம் இல்லாமல் ரிக் ஷாக்களை இயக்கிய குற்றங்களுக்காகவும், மதுபானம் அருந்தி வாகனங்களை இயக்கியதற்காகவும் இந்த ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.