ADDED : டிச 26, 2024 06:29 AM
பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வழக்கில், விதான் சவுதா போலீசார் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு காலியான மூன்று இடங்களுக்கு, கடந்த ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 2, பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் எம்.பி., சையது நசிர் உசேன் வெற்றியை, பெங்களூரு விதான் சவுதாவில் வைத்து கொண்டாடும் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது.
விதான் சவுதா போலீசார், ஹாவேரியை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பொதுவாக ஒரு வழக்கில் ஆறு மாதத்திற்குள், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் எட்டு மாதங்கள் ஆகியும், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எம்.பி., சையது நசிர் உசேனிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
'வழக்கமான நடைமுறையை விதான் சவுதா போலீசார் மறந்து விட்டனரா' என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

