ரூ.7 கோடியுடன் 'கம்பி நீட்டிய' பெண்ணுக்கு போலீசார் வலை
ரூ.7 கோடியுடன் 'கம்பி நீட்டிய' பெண்ணுக்கு போலீசார் வலை
ADDED : நவ 08, 2024 07:45 AM
தொட்டபல்லாபூர்: சீட்டு நடத்தி, நுாற்றுக்கணக்கானோரிடம், 7 கோடி ரூபாய் வசூலித்து, 'கம்பி' நீட்டிய பெண்ணை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின் முக்தாம்பிகா லே - அவுட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் புஷ்பகலா, 38. இவர் நான்கைந்து ஆண்டுகளாக, சீட்டு தொழில் நடத்துகிறார். அக்கம், பக்கத்தினருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். இதனால் பலரும் இவரிடம் சீட்டு போட்டனர்.
தங்கள் பிள்ளைகளுக்கு, திருமணம் செய்ய, வீடு கட்ட, தொழில் துவங்க என, பல்வேறு நோக்கங்களுக்கு 250க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கான ரூபாய் சீட்டு போட்டிருந்தனர்.
ஆரம்பத்தில் சிலருக்கு சீட்டு பணத்தை ஒழுங்காக கொடுத்ததால், நம்பிக்கையுடன் பலரும் இவரிடம் சீட்டு கட்டினர்.
சமீப நாட்களில் சீட்டு எடுத்தவர்களுக்கு, புஷ்பகலா பணம் தராமல் இழுத்தடித்தார்.
இதற்கிடையில் அக்டோபர் 27ம் தேதி, இவர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவானார். சீட்டு பணத்தை கேட்க வந்தவர்கள், வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக, தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில், புஷ்பகலா 7 கோடி ரூபாய் வரை, சுருட்டி கொண்டு தப்பியோடியது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

