ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.54.5 லட்சத்தை மீட்ட போலீஸ்
ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.54.5 லட்சத்தை மீட்ட போலீஸ்
ADDED : மே 07, 2025 11:50 PM
பாலக்காடு : வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, நம்ப வைத்து மோசடி செய்த சம்பவத்தில், ஐந்து நாட்களுக்குள், 54.5 லட்சம் ரூபாயை சைபர் பிரிவு போலீசார் மீட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா பகுதியைச் சேர்ந்தவர், ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, 58.77 லட்சம் ரூபாய் பணம் பறித்து விட்டனர், என, கடந்த ஏப்., 29ம் தேதி பாலக்காடு சைபர் குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின் படி, டி.எஸ்.பி., பிரசாத் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், புகார்தாரரின் வங்கி கணக்கில் மோசடி கும்பலுக்கு அனுப்பியதாக கூறப்படும், 58.77 லட்சம் ரூபாயில், 54.5 லட்சம் ரூபாய் 'ஹோல்டு' ஆகி கிடப்பது தெரிந்தது.
இது தொடர்பாக, பாலக்காடு தலைமை நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததின் அடிப்படையில், பணம் திருப்பி எடுப்பதற்கான உத்தரவு, கடந்த 3ம் தேதி நீதிபதியிடம் இருந்து கிடைத்தது.
இந்த உத்தரவை அன்றே வங்கி அதிகாரிகளுக்கு அனுப்பியதன் வாயிலாக, 54.5 லட்சம் ரூபாய் 5ம் தேதி புகார்தாரரின் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டது.
இதுபோல், 2024 நவம்பர் மாதம் பாலக்காடு சைபர் குற்றப்பிரிவு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், புகார்தாரருக்கு 1.16 கோடி ரூபாய் திரும்ப கிடைத்தது குறிப்பிடத்தக்கது.