போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை கடும் போக்குவரத்து நெரிசல்
போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 19, 2026 11:50 PM
புதுடில்லி: புதுடில்லி, பாரத் மண்டபத்தில் நடக்கவுள்ள உச்சிமாநாட்டுக்காக, போலீசார் நேற்று நடத்திய ஒத்திகையால், டில்லி மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், பயணியர் கடும் அவதி அடைந்தனர்.
இந்திய - ஆப்ரிக்க மாநாடு மற்றும் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு ஆகியவை, மே 28 முதல் ஜூன் 1 வரை, டில்லி பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடுகளை முன்னிட்டு, டில்லி மாநகர் முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, டில்லி மாநகர போலீஸ் சார்பில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மாநாடு நடக்கும் நாட்களில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய மாற்றுப்பாதைகள் நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டன. மேலும், பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால், நேற்று மாலை, 3:00 மணி வரை மத்திய, வடக்கு மற்றும் தெற்கு டில்லியில், குறிப்பாக, புதுடில்லி மாவட்டத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதை, ஏராளமானோர் தங்கள் மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ரிட்ஜ் சாலையில், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, நீண்டநேரம் நின்றன.
திலக் மார்க், மதுரா சாலை, எஸ்.பி.மார்க் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸ் அறிவித்து இருந்த மாற்றுப் பாதைகள் குறுகியதாக இருந்ததால் வேன், டாக்ஸி மற்றும் பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்த வாகனங்களுக்கு இடையில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சிக்கித் தவித்தன.
புதுடில்லி மாவட்டத்தில், ரிங் ரோடு மற்றும் வந்தே மாதரம் மார்க் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
வடக்கு மற்றும் தெற்கு டில்லி இடையே ராஜ்காட் மற்றும் சாராய் காலே கான் வழியாக ரிங் ரோட்டில் செல்லவும், மேற்கு மற்றும் தெற்கு டில்லிக்கு இடையே செல்வோர் தவுலா குவான், மோதி பாக் மற்றும் பிகாஜி காமா பிளேஸ் வழியாக ரிங் ரோட்டை அடையவும் பாதை மாற்றிவிடப்பட்டு இருந்தது.
விமான நிலையம் செல்ல தவுலா குவான் வழியாக தேசிய நெடுஞ்சாலை -8 மற்றும் குருகிராம் சாலை வாயிலாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
