கணக்கில் வராத ரூ.1.87 கோடி பறிமுதல் போலீஸ் அதிரடி நடவடிக்கை
கணக்கில் வராத ரூ.1.87 கோடி பறிமுதல் போலீஸ் அதிரடி நடவடிக்கை
ADDED : ஜன 29, 2025 08:23 PM
புதுடில்லி:தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் டில்லியில் 1.87 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
சப்ஜி மண்டி ரயில் நிலையத்தில், பஞ்சாப் மாநிலம் ரோபார் நகரைச் சேர்ந்த ஜஸ்விந்த பால் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத 32.61 லட்ச ரூபாயை ரயில்வே போலீசார் நேற்று முன் தினம் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
பஞ்சாபிலிருந்து டில்லிக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததாகவும், தன் மைத்துனர் இந்தப் பையைக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால், அந்தப் பணத்துக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. அவர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதேபோல, புதுடில்லி வடமேற்கு மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 6 பேரிடம் இருந்து கணக்கில் வராத 1.50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்மேற்கு மாவட்ட போலீஸ் நடத்திய சோதனையில், 3.98 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆஜாம்,27, எம்.டி.மரூப்,38, ஜாகிர் ராஜா,31, ஆகிய முவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 7ம் தேதி முதல் 27ம் தேதி வரை டில்லியில் இதுவரை, 7.60 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.