ADDED : அக் 17, 2024 09:36 PM
கிரேட்டர் கைலாஷ்: தெற்கு டில்லியில் ஜிம் உரிமையாளர் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை மதுராவில் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் கிரேட்டர் கைலாஷ் 1ல் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே அதன் உரிமையாளர் நாதிர் ஷா, 35, கடந்த மாதம் 12ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதுர் என்கிற அயன், கடந்த 12ம் தேதி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், நேற்று அதிகாலை மதுராவில் குறிப்பிட்ட இடத்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஜிம் உரிமையாளர் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட உத்தர பிரதேச மாநிலம், படாவுன் பகுதியைச் சேர்ந்த ராஜு என்கிற யோகேஷ், அங்கு வருவதை போலீசார் உறுதி செய்தனர்.
பாத் ரயில் நிலையம் அருகே ஆக்ரா - மதுரா நெடுஞ்சாலையில் அதிகாலை 4:00 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த குற்றவாளி, போலீசாரை பார்த்ததும் துப்பாக்கியால் சுடத் துவங்கினார்.
போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இதில் குண்டடிபட்டு குற்றவாளி கீழே விழுந்தார். அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர்.