போலீஸ் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து; பாலக்காட்டில் இருவர் கைது
போலீஸ் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து; பாலக்காட்டில் இருவர் கைது
ADDED : ஏப் 01, 2025 09:52 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில், போலீஸ் எஸ்.ஐ., உட்பட இருவரை கத்தியால் குத்திய, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் மீட்டன பகுதியில் இருதரப்பினர் இடையே, குடிபோதையில் தகராறு நடப்பதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒற்றைப்பாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., ராஜ்நாராயணன், 50, தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த அக்பர் என்பவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்றனர். இதனிடையே, எதிர் தரப்பினர் அக்பரை தாக்குவதற்காக வந்தனர். தடுக்க முயன்ற எஸ்.ஐ., மற்றும் அக்பரை, அக்கும்பல் கத்தியால் குத்தியது. இதில் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, இரு தரப்பினரிடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டது தெரிந்தது. கத்தியால் தாக்கியது அப்பகுதியை சேர்ந்த விவேக், 32, ஷிபு, 35, ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை நேற்று கைது செய்தனர். கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.