ஆர்.சி.பி., கொண்டாட்ட நிகழ்ச்சியில் போலீஸ் எச்சரிக்கை நிராகரிப்பு? : நிர்வாக துறை செயலருக்கு டி.சி.பி., எழுதிய கடிதம் அம்பலம்
ஆர்.சி.பி., கொண்டாட்ட நிகழ்ச்சியில் போலீஸ் எச்சரிக்கை நிராகரிப்பு? : நிர்வாக துறை செயலருக்கு டி.சி.பி., எழுதிய கடிதம் அம்பலம்
ADDED : ஜூன் 09, 2025 12:53 AM

பெங்களூரு: 'ஆர்.சி.பி., அணிக்கு விதான் சவுதாவில் பாராட்டு விழா நடத்துவது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும்' என, கர்நாடக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் சத்யவதிக்கு, விதான் சவுதா பாதுகாப்பு பிரிவு டி.சி.பி., எனப்படும் துணை போலீஸ் கமிஷனர் கரிபசன கவுடா எழுதிய கடிதம் தற்போது அம்பலமாகி உள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் வரலாற்றில், ஆர்.சி.பி., எனப்படும் 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' கிரிக்கெட் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. இதை கொண்டாடும் வகையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள விதான் சவுதாவில், கடந்த 4ம் தேதி மாலை நிகழ்ச்சி நடந்தது.
இதில் காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
சிக்கல்
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் ஆலோசகர் கோவிந்தராஜும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் நிர்வாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.சி.பி., அணி கோப்பை வென்றால், விதான் சவுதாவில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் சத்யவதிக்கு, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாக அதிகாரி சுபேந்து கோஷ் கடந்த 3ம் தேதி காலை கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தை விதான் சவுதா பாதுகாப்பு டி.சி.பி.,யான கரிபசன கவுடாவுக்கு அனுப்பிய சத்யவதி, 'விதான் சவுதாவில் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரலாமா?' என, விளக்கம் கேட்டார். இதற்கு பதிலளித்து அன்றைய தினம் மாலை, சத்யவதிக்கு கரிபசன கவுடா எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
அதன் விபரம்:
ஆர்.சி.பி., அணிக்கு நாடு முழுதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த அணி கோப்பை வென்றால் லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவர். விதான் சவுதா பாதுகாப்பு பிரிவில் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுப்பது பாதுகாப்பு பணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
விதான் சவுதாவில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வர வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நிகழ்ச்சி நடத்தினால், மதியத்திற்கு மேல் விதான் சவுதா அதிகாரிகள், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
சமரசம்
பாதுகாப்பு காரணங்களுக்காக விதான் சவுதாவை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வீரர்கள் அமரும் மேடையை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
பாதுகாப்புக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க எங்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு சட்டம் - ஒழுங்கு அதிகாரிகள் உதவியும் தேவைப்படுகிறது. 'ட்ரோன்' பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
விதான் சவுதா பாரம்பரிய கட்டடம் என்பதால், பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் நிகழ்ச்சியை நடத்த கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனினும், அரசு எடுக்கும் முடிவை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், முதல்வரின் அரசியல் செயலராக இருந்த கோவிந்தராஜ் கொடுத்த அழுத்தத்தால், விதான் சவுதாவில் அவசர, அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

