டிக்கெட் எடுக்காத போலீஸ்: ரயில்வே துறை கிடுக்கிப்பிடி
டிக்கெட் எடுக்காத போலீஸ்: ரயில்வே துறை கிடுக்கிப்பிடி
ADDED : செப் 23, 2024 01:11 AM

புதுடில்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணியர் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்கும்படி, மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரயில்வேயில் நடக்கும் பொதுவான குற்றங்களில் ஒன்று. இவர்களை பிடித்து அபராதம் விதிக்க முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ------ 2024 நிதியாண்டில் நாடு முழுதும் 3.6 கோடி பேர் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2,231 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரயிலில் போலீசாருக்கு இலவச பயண வசதி கிடையாது. முறையான டிக்கெட்டுடன் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் பலர் போலீஸ் என்று கூறிக்கொண்டு ரயிலில் இலவசமாக பயணிப்பது அதிகரித்துள்ளது.
இதையடுத்து போலீசாருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலம் நெருங்குவதால், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனையை அதிகரிக்கும்படி 17 மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
பண்டிகை கால கூட்ட நெரிசலை கருதி, டிக்கெட் இல்லாமல் பயணிப்போரை தடுக்க, டிக்கெட் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். டிக்கெட் இல்லாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டம் மற்றும் மண்டல அளவில் டிக்கெட் பரிசோதனை இயக்கத்தை கண்காணிக்க மூத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இது பற்றிய கருத்துகளை நவம்பர் 18ம் தேதிக்குள் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.