நக்சல்களை வளர்த்து அரசியல் ஆதாயம்; ஜார்க்கண்ட் அரசு மீது அமித் ஷா குற்றச்சாட்டு!
நக்சல்களை வளர்த்து அரசியல் ஆதாயம்; ஜார்க்கண்ட் அரசு மீது அமித் ஷா குற்றச்சாட்டு!
ADDED : நவ 03, 2024 09:40 PM

ராஞ்சி: ''காங்., ஜே.எம்.எம்., கூட்டணி அரசு, நக்சல்களை வளர்த்து விட்டு அரசியல் ஆதாயம் அடைகிறது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
ஜார்கண்டில் நவ.14 மற்றும் 20ம் தேதிகளில் இரு கட்டங்களாக, 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியாவில் நடந்த பா.ஜ., பேரணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கொண்ட ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நக்சல்களை வளர்க்கும் வேலையை தான் செய்தது. அதற்கு முடிவு கட்டத்தான் நாங்கள் வந்துள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரும் 2026ம் ஆண்டிற்குள் நக்சல்களே இல்லாமல் செய்து விடும்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 52 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தலித், மலைவாழ் மக்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு, நக்சல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் பெறுகிறது. இந்த ஆட்சியை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
வரும் 2026 மார்ச்சிற்குள் நக்சல்கள் இல்லாத நாடாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாற்றி விடும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.