ஓட்டுச்சாவடி வீடியோ: வெளியீடு தேர்தல் கமிஷன் விளக்கம்
ஓட்டுச்சாவடி வீடியோ: வெளியீடு தேர்தல் கமிஷன் விளக்கம்
ADDED : ஜூன் 22, 2025 01:26 AM

புதுடில்லி: 'ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகளை பொதுவெளியில் பகிர்வது, வாக்காளரின் தனியுரிமையை மீறுவதற்கு சமம்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவு வெளியாகி, 45 நாட்களுக்குள் அதை எதிர்த்து நீதிமன்றத்தில், தோல்வி அடைந்த வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொகுதியின் ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகளை அழித்து விடும்படி, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்தில் உத்தரவிட்டது.
இது கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகளை பொதுவெளியில் பகிர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகளை பொதுவெளியில் பகிர்வது, வாக்காளரின் தனியுரிமையை மீறுவதற்கு சமம். அத்தகைய கோரிக்கை சரியாக தோன்றினாலும், உண்மையில் அது மிகவும் ஆபத்தானது.
உதாரணத்துக்கு, ஒரு அரசியல் கட்சி குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் குறைந்த எண்ணிக்கையில் ஓட்டுகளை பெற்றால், எந்த வாக்காளர் ஓட்டளித்தார்; யார் ஓட்டளிக்கவில்லை என்பதை, 'சிசிடிவி' காட்சிகளில் எளிதாக அடையாளம் காண முடியும்.
அதன்பின், அவர்களை துன்புறுத்தவோ அல்லது மிரட்டவோ முடியும். இதனால் வாக்காளர் மன உளைச்சலுக்கு ஆளாவார்.
ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகளை, 45 நாட்களுக்கு தேர்தல் கமிஷன் பாதுகாக்கிறது. தேர்தல் முடிவை எதிர்த்து குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாடவில்லை என்றால் மட்டுமே, வீடியோ பதிவுகள் அழிக்கப்படும்.
நீதிமன்றத்தை நாடினால், சம்பந்தப்பட்ட தொகுதியின் ஓட்டுச்சாவடி வீடியோ பதிவுகள் பத்திரமாக வைக்கப்படும். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. தேவையில்லாமல் வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு, வாக்காளரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் விளையாட முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக வலைதளத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:
முன்பு, ஓட்டுச்சாவடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஓராண்டு வரை சேமித்து வைக்கப்பட்டன. தற்போது அவை 45 நாட்களில் அழிக்கப்படும் என, தேர்தல் கமிஷன் கூறுகிறது.
பதில்களை வழங்க வேண்டிய தேர்தல் கமிஷன், தற்போது ஆதாரங்களை நீக்குகிறது. இதன்படி, 'மேட்ச் பிக்சிங்' செய்யப்பட்டது தெளிவாகிறது. 'மேட்ச் பிக்சிங்' தேர்தல் ஜனநாயகத்திற்கு விஷம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.