1.64 லட்சம் வாகனத்துக்கு அபராதம் மாசுக் கட்டுபாட்டு நடவடிக்கை
1.64 லட்சம் வாகனத்துக்கு அபராதம் மாசுக் கட்டுபாட்டு நடவடிக்கை
ADDED : நவ 23, 2024 09:19 PM
புதுடில்லி, :மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 1.64 லட்சம் பேருக்கு 164 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் மாசு அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அக்., 1 முதல் நவ., 22 வரை மாசு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இயக்கிய 1.64 லட்சம் பேருக்கு 164 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 3.87 லட்சம் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டு பழமையான 6,531 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, கட்டுமான இடிப்புக் கழிவுகள் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்களை ஏற்றிச் சென்ற 872 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு சிறப்புக் கமிஷனர் அஜய் சவுத்ரி கூறியதாவது:
டில்லி மாநகரில் வாகனங்கள் வாயிலாக ஏற்பட்டும் காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதன நடத்தி வருகிறோம். கடந்த 18ம் தேதி நான்காம் கட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
மாசு சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் 20,743 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேநாளில் 736 காலாவதியான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்., 15 முதல் 13,762 நான்-டெஸ்டின் லாரிகள் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இந்தக் குளிர்காலத்தில் 1.36 லட்சம் லாரிகளில் சோதனை நடத்திய போலீசார், காற்று மாசு ஏற்படுத்தும் 16,264 லாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கடந்த 15ம் தேதி முதல் டில்லி எல்லையில் 2,176 அண்டை மாநில பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு, 1,736 பஸ்கள் மட்டுமே டில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. அதே நேரத்தில் 440 பஸ்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
தங்கள் வாகனத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.