பொங்கல் பண்டிகை: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
ADDED : ஜன 15, 2024 10:42 AM

புதுடில்லி: நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது: இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுடையை கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ரவி:
பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.
திமுக எம்.பி., கனிமொழி:
ஜாதி பேதங்கள் கடந்து நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாளே தை பொங்கல் திருநாள். மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளிலே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது. கடந்த மாதம் சென்னையில் பெரும் மழை பாதிப்புகள், அதே போல தென் மாவட்டங்களில் மிகபெரிய வெள்ள பாதிப்பில் சிக்கி மக்கள் பட்ட வேதனையையும் நாம் பார்த்தோம்.
இரண்டுமே காலநிலை மாற்றத்தால் வரக்கூடிய பாதிப்புகள் என்பதை நாம் உணரவேண்டும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து நமது எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.
ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!
ஒழுக்கம் தேவை : ரஜினி
பொங்கலை முன்னிட்டு ரஜினி அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் முன் வந்து கையசைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில்; அனைவரும் மகிழ்வான பொங்கலை கொண்டாட வேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்வு மகிழ்வாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் வாழ்த்து செய்தி: இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள். சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.