UPDATED : மார் 21, 2024 02:36 AM
ADDED : மார் 20, 2024 09:59 PM

புதுடில்லி: பொன்முடியை அமைச்சராக நியமிக்க கவர்னர் மறுத்தது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 21) விசாரணை எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். இவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
பதவி பிரமாணம்செய்து வைக்க கவர்னர் ரவி மறுத்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வருகிறது.

