பூரம் திருவிழா சர்ச்சை: சுரேஷ் கோபி கோரிக்கையை ஏற்க கேரள அரசு மறுப்பு
பூரம் திருவிழா சர்ச்சை: சுரேஷ் கோபி கோரிக்கையை ஏற்க கேரள அரசு மறுப்பு
ADDED : நவ 01, 2024 04:45 AM

கொச்சி : கேரளாவில் பூரம் திருவிழாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வலியுறுத்திய நிலையில், ''அதற்கு அவசியம் இல்லை,'' என, மாநில அமைச்சர் முஹமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது.
30 யானைகள் அணிவகுத்து நின்று 'வண்ணக் குடை மாற்றும்' நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவில் வெடிக்கப்படும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திருச்சூரில் திரள்வது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த மே மாதம் நடந்த திருவிழாவின் போது போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் விமரிசையாக நடத்தப்படவேண்டிய திருவிழா எளிமையாக நடந்தது.
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடத்தப்படும் வாணவேடிக்கை திருவிழா, விடிந்தபின் பகலில் நடத்தப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாகவே பூரம் திருவிழா சுமுகமாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், திருச்சூர் தொகுதியின் பா.ஜ., - எம்.பி.,யும், திரைப்பட நடிகரும், மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று கூறுகையில், ''பூரம் திருவிழாவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான முஹமது ரியாஸ் கூறியதாவது:
சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,யை கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு இருக்கும் போது, திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அவசியமில்லை. சுரேஷ் கோபியின் இதுபோன்ற கருத்துகள் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். நிஜ வாழ்க்கைக்கு சரி வராது.
திருச்சூர் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு காங்கிரசிற்கு முக்கிய பங்கு உள்ளது. அக்கட்சியின் ஓட்டுக்களே, பா.ஜ.,வுக்கு விழுந்தன. எனவே, சுரேஷ் கோபியின் வெற்றி அவரால் மட்டும் வந்தது அல்ல. அதற்கு காங்கிரசே காரணம்.
அது தொடர்பான உண்மைகளே இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதேனும் எடுத்தாரா? இவை எதுவும் நடைபெறாத நிலையில், பூரம் திருவிழா சர்ச்சை குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என சொல்வது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.