பூரம் விழா சர்ச்சை: ஆம்புலன்சில் வந்த சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு
பூரம் விழா சர்ச்சை: ஆம்புலன்சில் வந்த சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு
ADDED : நவ 03, 2024 12:21 PM

திருச்சூர்: திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு விதிகளை மீறி ஆம்புலன்சில் வந்த குற்றச்சாட்டின் கீழ் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது.30 யானைகள் அணிவகுத்து நின்று 'வண்ணக் குடை மாற்றும்' நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவில் வெடிக்கப்படும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திருச்சூரில் திரள்வது வழக்கம். இந்தாண்டு திருவிழாவின் போது போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதனால் விமரிசையாக நடத்தப்படவேண்டிய திருவிழா எளிமையாக நடந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடத்தப்படும் வாணவேடிக்கை திருவிழா, விடிந்தபின் பகலில் நடத்தப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாகவே பூரம் திருவிழா சுமுகமாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. வாகன போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த விழாவின் போது, அங்கு ஆம்புலன்சில் வந்ததாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது புகார் எழுந்தது. இதனை மறுத்த அவர், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார். இதனை ஏற்க மாநில அரசு மறுத்தது. பிறகு ஆம்புலன்சில் வந்ததை ஒப்புக் கொண்ட சுரேஷ் கோபி அதற்கு உடல்நலனை காரணம் காட்டினார். கால் வலியால் அவதிப்பட்ட நான். கூட்டத்தில் நடக்க சிரமப்பட்டேன். இதனால், எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் இளைஞர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் செல்ல உதவினர் எனக்கூறினார்.
இந்நிலையில், திரிச்சூர் பூரம் திருவிழா நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்சில் வந்ததற்காக சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி., 279, 34 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 179,184, 188,192 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.