அனுமதியின்றி ரோட்டோரம் பாடிய எட் ஷீரன்! மைக் கேபிளை கழற்றிய பெங்களூரு போலீஸ்
அனுமதியின்றி ரோட்டோரம் பாடிய எட் ஷீரன்! மைக் கேபிளை கழற்றிய பெங்களூரு போலீஸ்
ADDED : பிப் 09, 2025 04:35 PM

பெங்களூரு; பெங்களூருவில் முன் அனுமதியின்றி சாலையோரம் பிரபல பாடகர் எட் ஷீரன் பாடியதை கண்ட போலீசார், மைக்கின் கேபிளை கழற்றிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் எட் ஷீரன். ஏராளமான கிராமி விருதுகளை பெற்ற அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
எட் ஷீரன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ஹைதராபதில் அவரின் இசை நிகழ்ச்சி முடிந்துவிட்டது. சென்னையில் அவரின் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. பிப்.15ம் தேதி வரை எட் ஷீரன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந் நிலையில் பெங்களூருவில் அவர் சாலையோரத்தில் முன் அனுமதியின்றி பாடும் போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். பிரபலமான பகுதியான சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் சாலையோரம் தமது குழுவுடன் சென்ற எட் ஷீரன், அங்கேயே மைக்கில் பாட ஆரம்பித்தார்.
கையில் கிடார், முகம் முழுக்க சிரிப்பு பிளஸ் உற்சாகம் பொங்க Shape of you என்ற தமது பாடலை (இந்த பாடலுக்குத் தான் அவருக்கு கிராமி விருது கிடைத்தது) பாடத் தொடங்கினார். பாடிய அடுத்த சில நொடிகளில் அங்குள்ளவர்கள் அவரை இனம் கண்டு உற்சாக குரல் எழுப்பினர்.
அதே நேரம் எங்கிருந்தோ வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேராக மைக் முன்பு நின்றபடி பாடிக் கொண்டு இருந்த எட் ஷீரன் முன் நின்றார். அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
அப்போது எங்கிருந்தோ வந்த இளைஞர் ஒருவர் போலீஸ் அதிகாரியின் கையை பிடித்து இழுக்க, கோபம் கொப்பளிக்க பேசி கையை தட்டிவிட்டார்.பின்னர் கீழே குனிந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த மைக்கின் கேபிளை சட்டென்று கழற்றினார். பிரபல பாடகர் பாடுவதை போலீசார் தடுப்பதா என்று கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன.
காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து எட் ஷீரன் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், அதை ஏற்க மறுத்த பெங்களூரு போலீசார், அனுமதி கேட்டு கடிதம் மட்டுமே கொடுத்துள்ளனர், அவர்களுக்கு இன்னமும் அனுமதி தரவில்லை. இப்படி இருக்கும் போது சாலையோரம் பாடுவது எப்படி சரியாகும் என்று கேள்வியும், விளக்கமும் அளித்துள்ளனர்.

