நடிகர் சயிப் அலிகான் வீட்டுக்குள் திருடன் நுழைந்தது எப்படி? கட்டுமான ஊழியர்களிடம் விசாரணை
நடிகர் சயிப் அலிகான் வீட்டுக்குள் திருடன் நுழைந்தது எப்படி? கட்டுமான ஊழியர்களிடம் விசாரணை
UPDATED : ஜன 16, 2025 05:21 PM
ADDED : ஜன 16, 2025 08:47 AM

மும்பை: மும்பையில் கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான், ஆபரேசன் முடிந்து ஐ.சி.யூ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மும்பை பந்த்ராவில் பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதி வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான். இதனை கவனித்த நடிகர் சயிப் அலிகான், அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதில், முதுகு தண்டுவடம், மார்பு உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 இடங்களில் கத்தி ஆழமாக கிழித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது உடனிருந்த வீட்டு பணிப்பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆபரேசன் நடந்து முடிந்த நிலையில், ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துள்ளார். இதையடுத்து, ஐ.சி.யூ.,வுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
'அவர் விரைந்து குணமடைய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்', என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரபலங்களுக்கே அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்,' என்று கூறியுள்ளார்.இதேபோல, அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கரீனா கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் வீட்டில் நேற்று இரவு திருட முயற்சி நடந்தது. இதை தடுக்க முயற்சித்த போது ஏற்பட்ட காயம் காரணமாக சயிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நானும் குழந்தைகளும் நலமாக இருக்கிறோம்,' என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டில் உள்ள அவசரகால படிக்கட்டுகளை பயன்படுத்தி, அந்த நபர் வீட்டுக்குள் புகுந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் மர்ம நபர்களின் நடமாட்டம் ஏதும் இல்லை. எனவே, அவரது வீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருவதால், அதில் பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சயிப் அலி கான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு ஆவார். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். தாயார் பிரபல நடிகை சர்மிளா தாகூர்.
குற்றவாளி புகைப்படம் வெளியீடு
இதனிடையே சயிப் அலிகானை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு அவரை தேடி வருகின்றனர்.