யோகா, சிறுதானிய உணவை பிரபலப்படுத்துங்கள்: பஞ்., தலைவர்களுக்கு பிரதமர் கடிதம்
யோகா, சிறுதானிய உணவை பிரபலப்படுத்துங்கள்: பஞ்., தலைவர்களுக்கு பிரதமர் கடிதம்
UPDATED : ஜூன் 18, 2024 05:04 PM
ADDED : ஜூன் 18, 2024 04:21 PM

புதுடில்லி: யோகா, சிறு தானிய உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: அடிமட்ட அளவில் ஜனநாயக நிறுவனங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், முழுமையான ஆரோக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்காக யோகா மற்றும் சிறு தானிய உணவுகளை பிரபலப்படுத்த வேண்டும்.
அங்கன்வாடிகள், சமுதாய கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகளில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகளை துவக்கி, மக்களை கவர வேண்டும். இதன் மூலம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உலக நாடுகள் தயாராகி வருகின்றன. நமது வாழ்க்கையில், யோகா ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்களினாலும், சர்வதேச சமூகத்தில் யோகாவின் தாக்கத்தினாலும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
நமது மனதிற்கும், உடலுக்கும் யோகா அத்தியாவசியம் ஆனது போல், சிறு தானிய உணவுகளும், ஊட்டச்சத்து மூலம் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. அவை, நமது மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன், பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக போராடுகிறது. சிறு தானிய உணவுகளுக்கான தேவை அதிகரிப்பால், நமது சிறு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.