48 அரசியல்வாதிகளின் ஆபாச படம்: கர்நாடகா அமைச்சர் பேச்சால் பரபரப்பு
48 அரசியல்வாதிகளின் ஆபாச படம்: கர்நாடகா அமைச்சர் பேச்சால் பரபரப்பு
UPDATED : மார் 21, 2025 07:30 AM
ADDED : மார் 21, 2025 07:04 AM

பெங்களூரு: ''மாநில, தேசிய அளவிலான அரசியல்வாதிகள் 48 பேர் தொடர்பான முக்கிய விஷயங்கள் அடங்கிய 'பென்டிரைவ்' உள்ளது. ஆபாச சிடி மற்றும் பென்டிரைவ் தயாரிக்கும் தொழிற்சாலையாக கர்நாடகா மாறிவிட்டது,'' என்று, சட்டசபையில் கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா உண்மையை 'போட்டு' உடைத்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துமகூரு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரை, ஹனிடிராப் எனப்படும் பெண்களை வைத்து மயக்க முயற்சி நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று காலை அளித்த பேட்டியில், ''அமைச்சர் ஒருவரை இரண்டு முறை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்து உள்ளது. இதுபற்றி புகார் அளிக்கும்படி பாதிக்கப்பட்ட அமைச்சரிடம் கூறுவேன்,'' என்று சொல்லி இருந்தார்.
சட்டசபையில் நேற்று, பா.ஜ., மூத்த உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசுகையில், ''முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர், தனது குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாயிலாக, அமைச்சர் ராஜண்ணாவை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்து உள்ளது. இதே நிலை, நாளை மற்ற உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம்,'' என்றார்.
இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் ராஜண்ணா பேசுகையில், ''என் பெயரை எத்னால் இங்கு குறிப்பிட்டு உள்ளார். இதனால் உண்மையை சொல்ல, நான் கடமைப்பட்டு உள்ளேன்.
''துமகூரு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரை ஹனிடிராப் செய்ய முயற்சி என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. நானும், பரமேஸ்வரும் மட்டுமே துமகூரு மாவட்ட அமைச்சர்கள்.
''ஆபாச சிடி, மற்றும் பென்டிரைவ் தயாரிக்கும் தொழிற்சாலையாக கர்நாடகா மாறி உள்ளது. மாநில, தேசிய தலைவர்கள் 48 பேரின் வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தயாரித்தது யார் என்ற உண்மை தெரிய வேண்டும்,'' என்றார்.
கர்நாடகா காங்கிரசில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. சித்தராமையாவின் ஆதரவாளரான ராஜண்ணாவை சிக்க வைக்கவே, இந்த ஹனி டிராப் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.