ADDED : ஜன 17, 2025 07:30 AM

ஹெச்.ஏ.எல்.: நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக உறவினர் மிரட்டியதால், ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ஹெச்.ஏ.எல்., பகுதியில் வசித்தவர் சுஹாசி சிங், 24. மாரத்தஹள்ளியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 12ம் தேதி ஹெச்.ஏ.எல்., பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த உறவினர் பிரவீன் சிங், 28 என்பவரை சந்திக்க சென்றார். அப்போது திடீரென, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய சுஹாசியை, பிரவீன் மீட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். ஹெச்.ஏ.எல்., போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
சுஹாசியும், பிரவீனும் உறவினர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அடிக்கடி வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
அப்போது, இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை, பிரவீன் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை உனது பெற்றோருக்கு அனுப்புவேன். சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.
இதற்கிடையில் சுஹாசி, வேறு ஒரு வாலிபருடன், 'டேட்டிங்' செய்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த பிரவீன் கோபம் அடைந்துள்ளார். கடந்த 12ம் தேதி சுஹாசிக்கு போன் செய்து ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
பிரவீன் தொந்தரவு கொடுத்ததால் மனம் உடைந்த சுஹாசி, தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது. பிரவீன் நேற்று கைது செய்யப்பட்டார்.