கொரோனாவுக்கு பிறகான வளர்ச்சி: பின்தங்கியது தமிழகம்
கொரோனாவுக்கு பிறகான வளர்ச்சி: பின்தங்கியது தமிழகம்
ADDED : டிச 13, 2024 04:55 AM

புதுடில்லி: கொரோனா காலத்துக்குப் பிறகான, 2021-22 மற்றும் 2022 - 23ம் நிதியாண்டுகளில், 9 சதவீத வளர்ச்சி கண்ட 17 மாநிலங்களில், தமிழகம் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக, 'பி.எச்.டி., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி' எனப்படும் பி.எச்.டி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதா மந்தநிலைக்குப் பிறகு 17 மாநிலங்கள், 2022- 2023 நிதியாண்டுகளில் 9 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியை தாண்டின. தமிழகம் உட்பட 25 மாநிலங்கள் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தன. குஜராத், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்துக்கு மேல் பதிவானது.
இந்த மாநிலங்களின் அதிவிரைவான வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக மீள பெரிதும் உதவியது. பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள், வேளாண் உற்பத்தியில் முன்னிலை பெற்றதன் வாயிலாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்கள் தொழில் வளர்ச்சியும், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டதன் வாயிலாக நாட்டின் ஜி.டி.பி.,யில் கணிசமான பங்களித்தன.
சுற்றுலாவை பொருளாதார வளர்ச்சியின் மையமாக கொண்ட கேரளா, ராஜஸ்தான், கோவா மாநிலங்கள் அன்னியச் செலாவணி ஈட்டியதில் முன்னிலை வகித்தன. கட்டமைப்பு திட்டங்களில் தமிழகம் மற்றும் ஆந்திராவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் குஜராத், ராஜஸ்தானும் கவனம் செலுத்தின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

