போஸ்டர் செய்தி –––––––––––––––––––––––––––––-––– ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் ‘மாஜி’ முதல்வர் பினராயிக்கு சிக்கல்?
போஸ்டர் செய்தி –––––––––––––––––––––––––––––-––– ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் ‘மாஜி’ முதல்வர் பினராயிக்கு சிக்கல்?
ADDED : செப் 08, 2026 07:42 PM
கொச்சி: ‘சி.எம்.ஆர்.எல்., – எக்ஸாலாஜிக்’ தொடர்புடைய பண மோசடி வழக்கில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், 81, அவரது மகள் வீணா, அவரது மருமகனும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கை பதியக் கோரி, அம்மாநில போலீசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது.
கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 – 26 வரை மார்க். கம்யூ., மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் செயல்படும், சி.எம்.ஆர்.எல்., எனப்படும், ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல்லிமிடெட்’ என்ற நிறுவனத்தில், 2019 ஜனவரியில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்நிறுவனம், 130 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில், பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத, ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற ஐ.டி., நிறுவனத்துக்கு, 2018 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில், எந்தவொரு ஐ.டி., சேவையும் பெறாமல், 2.78 கோடி ரூபாயை சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிந்தனர். இது தொடர்பாக, பினராயி விஜயன், வீணா, அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் தொடர்புடைய இடங்களில், கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
கேரளாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் சதீசன் தலைமையில் காங்., கூட்டணி நடக்கும் நிலையில், அம்மாநில போலீஸ் டி.ஜி.பி., ரவாடா ஏ.சந்திரசேருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘சி.எம்.ஆர்.எல்., – எக்ஸாலாஜிக் தொடர்புடைய பண மோசடி வழக்கில், பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த மார்க்.கம்யூ., தலைவர்கள், ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ., அரசு ஈடுபடுகிறது. எந்த வழக்காக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்’ என்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்., மூத்த தலைவரும், கேரள உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா, ‘‘அமலாக்கத் துறை கடிதம் குறித்து சட்டப்படி முடிவு எடுக்கப்படும்,’’ என்றார். இந்த விவகாரத்தில், ஆளும் காங்., அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
