பீஹார் என்றால் நிதிஷ்... புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது: நிதிஷை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்கள்
பீஹார் என்றால் நிதிஷ்... புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது: நிதிஷை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்கள்
ADDED : நவ 14, 2025 03:05 PM

பாட்னா; பீஹார் என்றால் நிதிஷ்குமார்தான், புலி இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது என்ற வாசகங்களுடன் வாழ்த்து போஸ்டர்கள் பாட்னாவில் ஒட்டப்பட்டு உள்ளன.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மெகா வெற்றியை பெற்று இருக்கிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், பாஜவினரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொண்டாட்டத்திலும் மற்றுமொரு கொண்டாட்டமாக, தலைநகர் பாட்னாவில் ஒட்டப்பட்டுள்ள வாழ்த்து போஸ்டர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. குறிப்பாக, பாட்னாவின் முக்கிய இடங்களில் தொண்டர்கள் வைத்துள்ள வெற்றி பதாகையை அவ்வழியே செல்பவர்கள் ஒரு கணம் பார்க்காமல் செல்வதில்லை.
பீஹார் என்றாலே நிதிஷ்குமார் தான், பீஹாருக்கு அர்த்தம் நிதிஷ்குமார் என்ற வாசகங்களே அதற்கு பிரதான காரணம். மற்றொரு போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகம் சினிமா வசனத்தை மிஞ்சும் வகையில் உள்ளது.
இப்போது டிரெண்ட் மட்டுமே வந்துள்ளது, பீஹார் அரசியலில் நிதிஷ் தான் உண்மையான புலி என்று வாசகங்கள் பளிச்சிடுகின்றன. மற்றொரு போஸ்டர் நிதிஷ்குமார் வீட்டின் வெளியே ஒட்டப்பட்டு உள்ளது.
புலி (நிதிஷ்குமாரை குறிப்பிடுகின்றனர்) இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. இந்த வித்தியாசமான போஸ்டரில், நிதிஷ் பக்கத்தில் ஒரு புலி நிற்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படி வித்தியாசமான போஸ்டர்கள், பதாகைகளை அவ்வழியே செல்பவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். இன்னும் சிலரோ, அதன் அருகில் சென்று செல்பி போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டாடுகின்றனர்.

