கிராமப்புறங்களில் வறுமை 4.86 சதவீதமாக குறைவு; எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
கிராமப்புறங்களில் வறுமை 4.86 சதவீதமாக குறைவு; எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : ஜன 03, 2025 10:14 PM

புதுடில்லி: நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 4.86 சதவீதமாக வறுமை குறைந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் நிலவும் வறுமை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் பலனாக, கடந்த 2011-12ம் ஆண்டில் கிராமப்புறங்களில் 25.7 சதவீதமாக இருந்த வறுமை, 2023-24ம் ஆண்டில் 4.86 சதவீதமாக குறைந்துள்ளதாக எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதேவேளையில், நகர்ப்புறங்களில் 4.09 சதவீதமாக இருந்த வறுமை நிலை, தற்போது 4.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோல, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு இடையிலான வேறுபாடு, கடந்த 2009-10ம் ஆண்டுகளில் 88.20 சதவீதமாக இருந்தது. அது தற்போது, 69.7 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டுகளில் (எம்.ஆர்.பி. நுகர்வு அடிப்படையில்) கிராமங்களில் வறுமை கோடு ரூ.816ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.1,000மாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, கிராமப்புறங்களில் ரூ.1,632ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.1,944ஆகவும் உள்ளது.
பயனாளிகளின் நேரடி வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், கிராமப்புற உள்கட்டமைப்பு, விவசாயிகளின் வருவாயைப் பெருக்குதல் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று அறிக்கையில் தெரிய வந்துள்ளது.