சட்டவிரோத ரிசார்ட்கள், விடுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பால் பரபரப்பு
சட்டவிரோத ரிசார்ட்கள், விடுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பால் பரபரப்பு
ADDED : மார் 20, 2025 05:07 AM

கொப்பால: வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி பலாத்காரம், ஒடிசா பயணி கொலையை தொடர்ந்து, சட்ட விரோதமாக இயங்கும் ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளில் பல்வேறு துறையினர் ரெய்டு துவக்கி உள்ளனர்.
கொப்பால் மாவட்டம், சானாபூரில் கடந்த சில நாட்களுக்கு முன், இஸ்ரேலிய சுற்றுலா பெண் பயணி உட்பட இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
அதை தடுக்க வந்த ஒடிசா மாநில நபர், கால்வாயில் தள்ளிவிடப்பட்டதில், உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 துறையினர்
இதையடுத்து, நேற்று காலை வருவாய் துறை, வனத்துறை, சுற்றுலா துறை, கலால் துறை, மின்சார துறை, போலீசார் ஒரே நேரத்தில் ஆனேகொண்டி - சானாபூர் இடையே உள்ள சிக்கராம்புரா, கடேபாகிலு, ஹனுமனஹள்ளி, விருபபுரகட்டே, சானாபூரில் உள்ள ரிசார்ட்கள், ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்களில் அதிரடி, 'ரெய்டு' நடத்தினர்.
சட்டவிரோதமாக இயங்கிய ரிசார்ட்கள், ஹோட்டல்களின் மின் இணைப்பை, மின் துறை ஊழியர்கள் துண்டித்தனர்.
சில இடங்களில் வனத்துறை நிலத்தில் சட்ட விரோதமாக அறைகள் போன்று டென்ட் அமைத்து, மின் இணைப்பும் கொடுத்துள்ளனர்.
சில ரிசார்ட்களில் மின் இணைப்பை துண்டித்தபோது, அவர்கள் கால அவகாசம் கேட்டனர். ஆனால், அவகாசம் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு 40 ரிசார்ட், ஹோம் ஸ்டேக்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
எச்சரிக்கை
அப்போது கங்காவதி ரூரல் போலீஸ் நிலைய எஸ்.ஐ., ரங்கப்பா, ''துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை, சட்ட விரோதமாக மீண்டும் இணைத்து பயன்படுத்தினால், வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்று எச்சரித்தார்.
சில ரிசார்ட் உரிமையாளர்கள், நீதிமன்றம் மூலம் வாங்கிய தடை உத்தரவு நகலை காண்பித்தனர்.
தாசில்தார் நாகராஜ் கூறியதாவது:
சட்ட விரோதமாக இயங்கி வந்த ரிசார்ட், ஹோம் ஸ்டேக்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. எங்களின் உத்தரவை பின்பற்றியிருந்தால், சானாபூர் சம்பவம் நடந்திருக்காது. மாநில அரசின் கவுரவமும் பாதித்திருக்காது.
சுற்றுலா துறையின் வழிகாட்டுதலின்படி, தற்போது சட்டவிரோத ரிசார்ட், ஹோம் ஸ்டேக்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக, சட்ட விரோத ரிசார்ட், ஹோம் ஸ்டேக்கள் அகற்றப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை, மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.