அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்விநியோக நிறுவனங்கள் மறுப்பு
அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்விநியோக நிறுவனங்கள் மறுப்பு
ADDED : ஏப் 03, 2025 07:38 PM
கர்கர்டூமா:நகரில் மின்வெட்டு செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மின்விநியோக நிறுவனங்கள் மறுத்துள்ளன.
கோடை நெருங்கி வருவதால், டிஸ்காம்கள் மின் நுகர்வு முதன்முறையாக 9,000 மெகா வாட் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மின்விநியோக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், தேசிய தலைநகரில் முன்னறிவிப்பின்றி மின்வெட்டு செய்யப்படுவதாக எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஆதிஷி சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மின் விநியோகத்தை நிர்வகிக்க பா.ஜ., அரசு தவறிவிட்டதாகவும் கடந்த மாதம் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்வெட்டு அதிகரித்துள்ளதாக அவர் இந்த வார துவக்கத்தில் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் இது விவாதத்திற்குள்ளானது.
மின்வெட்டு குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டசபையில் மின்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை பி.எஸ்.இ.எஸ்., மற்றும் டாடா மின் விநியோக நிறுவனங்கள் நேற்று முன்தினம் மறுத்துள்ளன. இதுதொடர்பாக இரு நிறுவனங்களும் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக வலைதளங்களில் மின்வெட்டு தொடர்பாக பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. ஒருவேளை ஏதேனும் பிரச்னை இருந்தால் அதிகாரப்பூர்வ தளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பிரச்னையை தீர்க்க 24 மணி நேரமும் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மின்தடை குறித்த புகார்களை இந்த குழுவினர் உடனடியாக நிவர்த்தி செய்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

