கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம்
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் : உச்சநீதிமன்றம்
UPDATED : ஜூலை 25, 2024 01:19 PM
ADDED : ஜூலை 25, 2024 11:48 AM

புதுடில்லி: ‛‛ கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது '' என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 8 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது இன்று வரை மத்திய அரசு விதித்துள்ள வரிகளை திரும்ப பெறுவது குறித்து உச்சநீதிமன்றத்திடம் மாநில அரசுகள் விளக்கம் கேட்டன.இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதில் டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். நீதிபதி பிவி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பு சரியல்ல
8 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை வாசித்த சந்திரசூட் கூறியதாவது: அரசியலமைப்பு விதிகளின் கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க பார்லிமென்டிற்கு அதிகாரம் இல்லை. கனிம வளங்களுக்கான ராயல்டி என்பது வரி என 1989 ல் உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு சரியல்ல.
கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. குத்தகை பணம் தான். மாநில அரசுகளுக்கே வரி விதிக்க உரிமை உண்டு. மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. அது குத்தகை பணம் தான். சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறுபட்ட தீர்ப்பு
நீதிபதி பிவி நாகரத்னா அளித்த மாறுபட்ட தீர்ப்பில் கூறியதாவது: கனிம வளங்கள் மற்றும் அது இருக்கும் நிலங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.