பயிற்சி டாக்டர் மரணம்: மே.வங்க அரசை கேள்விக்கணைகளால் விளாசிய உச்சநீதிமன்றம்
பயிற்சி டாக்டர் மரணம்: மே.வங்க அரசை கேள்விக்கணைகளால் விளாசிய உச்சநீதிமன்றம்
UPDATED : ஆக 22, 2024 05:28 PM
ADDED : ஆக 22, 2024 04:02 PM

புதுடில்லி: கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் மரண விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்சநீதிமன்றம், மேற்கு வங்க அரசிற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
அறிவுரை
கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து சிபிஐ மற்றும் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். காலை விசாரணையின் போது, போராட்டம் நடத்தும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகும் விசாரணை நடந்தது.
சந்தேகம்
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், டாக்டரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு இரவு 11: 45 மணிக்கு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த மாணவியின் பெற்றோரிடம், அதிகாரிகள் முதலில் தற்கொலை என்றனர். பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறினர். டாக்டரின் நண்பர்கள், உடலை பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
மாற்றம்
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு முயற்சி செய்தது. சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு நாங்கள் விசாரணையை துவங்கிய போது, மருத்துவமனையில் அனைத்தும் மாற்றப்பட்டு இருந்தது. உடல் தகனம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது, விவகாரத்தை மூடி மறைப்பதையே காட்டுகிறது. இதனால் சந்தேகமடைந்த நண்பர், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினார் என்றார்.
மாற்றவில்லை
இந்த வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், வழக்கில் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. எதுவும் மாற்றப்படவில்லை. என்ன நடந்தது என்பது குறித்து அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது. உள்ளூர் போலீசார் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையும் உள்ளது என்றார்.
ஆச்சர்யம்
நீதிபதி பர்திவாலா கூறியதாவது: மேற்கு வங்க மாநில அரசின் ஒட்டு மொத்த நடவடிக்கையை எனது 30 வருட அனுபவத்தில் பார்த்தது கிடையாது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே பிரேத பரிசோதனை நிகழ்ந்துள்ளது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. போலீசாரின் நடவடிக்கைகள் சட்டப்படி இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் இயற்கைக்கு மாறான மரணம் என முடிவு செய்யப்பட்டதா? போலீஸ் ஏஎஸ்பியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் போலீஸ் டைரியில் இது இயற்கைக்கு மாறான மரணம் என எப்போது எழுதப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
ஆஜராக உத்தரவு
தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், இந்த மரணம் காலை 10:10 மணிக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்தையும், ஆதாரங்களையும் இரவு தான் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கை ஆரம்பத்தில் பதிவு செய்த அதிகாரி அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் . டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவ அறிக்கை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், போலீசாரின் அறிக்கையில், குற்றம் நிகழ்ந்த இடத்தை போலீசார் , பிரேத பரிசோதனை முடிந்த பிறகே கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவர், இறந்த டாக்டர் உடலில் 150 கிராம் விந்தணு உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வாதங்களின் போது சமூக வலைதளங்களில் வருவதை பயன்படுத்தக்கூடாது. பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் உள்ளது . எனது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற போது அரசு மருத்துவமனை தரைதளத்தில் நான் தூங்கி உள்ளேன். டாக்டர்கள் 36 மணி நேரம் பணிபுரிகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். பெண் டாக்டரின் உடலை பார்த்த பிறகு, மருத்துவ வாரியமானது, அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம். பலாத்காரம் நடந்திருக்கக்கூடும் என தெரிவித்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகே விசாரணை துவங்கி உள்ளது என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்ய 14 மணி நேரம் தாமதம் ஏன்? கல்லூரி முதல்வர் உடனடியாக கல்லூரி சென்றாரா? வழக்குப்பதிவு செய்தாரா? யாரை பாதுகாக்க அவர் முயற்சி செய்கிறார்?
போராட்டம் நடத்தும் டாக்டர்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பயப்படுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தாங்கள் குறிவைக்கப்பட்டு உள்ளதாக கருதுகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கு திரும்பும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கு தடை விதிக்கப்படும். தற்போது பணிக்கு திரும்ப வேண்டிய நேரம். கடந்த கால நிகழ்வுகளுக்காக பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பது கூடாது. டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும். நீதியும் மருத்துவமும் தடைபடக்கூடாது.
அமைதியான போராட்டம் தடைபடக்கூடாது என நாம் கூறும்போது, வழக்கமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாக்டர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.. டாக்டர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.