கோலாப்பூர் செருப்பு கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க தயார்: 'ப்ராடா' நிறுவனம்
கோலாப்பூர் செருப்பு கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க தயார்: 'ப்ராடா' நிறுவனம்
ADDED : ஜூன் 29, 2025 01:24 AM

மும்பை: 'இந்திய கைவினை கலைஞர்களின் தயாரிப்பான கோலாப்பூர் காலணிகள் மீதான ஈடுபாடு காரணமாகவே அந்த வகை செருப்புகள் பேஷன் ஷோவில் பயன்படுத்தப்பட்டன' என, ப்ராடா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் தயாரிக்கப்படும் தோல் வகை செருப்புகள் உலகம் முழுதும் புகழ்பெற்றவை.
புவிசார் குறியீடு
பல நுாற்றாண்டுகளாக கைகளாலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படும், இந்த செருப்புகளுக்கு, 2019ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
இந்த சூழலில், ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலன் நகரில் நடந்த, 'பேஷன் ஷோ'வில் கோலாப்பூர் செருப்புகளை போலவே வடிவமைக்கப்பட்ட செருப்புகளை, 'ப்ராடா' என்ற பன்னாட்டு காலனி தயாரிப்பு நிறுவனம் காட்சிப்படுத்தியது.
இது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில், தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர வலியுறுத்தி மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்து கோலாப்பூர் கைவினைக் கலைஞர்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து, நிகழ்ச்சியை நடத்திய மிலன் நகரில் உள்ள பேஷன் ஹவுசுக்கும், 'ப்ராடா' நிறுவனத்துக்கும், மஹாராஷ்டிரா வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண் சபை நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது.
இதன் தலைவர் லலித் காந்தி அனுப்பிய கடிதத்தில், 'இத்தாலியில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட செருப்புகள், கோலாப்பூர் வகை செருப்பை போலவே உள்ளது.
'கைவினை கலைஞர்களின் சம்மதம் இன்றி இது நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட கலைஞர்களின் சமூகங்களுக்கு பயனளிக்கும் வகையில், அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க, 'ப்ராடா' நிறுவனம் முன்வர வேண்டும்' என, வலியுறுத்தினார்.
உரிய மரியாதை
இதற்கு, 'ப்ராடா' நிறுவனத்தின் சமூக பொறுப்புக் குழு தலைவர் லோரென்சோ பெர்டெல்லி அளித்துள்ள பதிலில், 'சமீபத்திய பேஷன் ஷோவில் இடம்பெற்ற செருப்புகள் பல நுாற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட இந்திய கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் காலணிகளால் ஈர்க்கப்பட்டவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
'அவை இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இந்த விஷயத்தில் கோலாப்பூர் காலணிகள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களுடன் பேச்சு நடத்தவும், உரிய மரியாதை அளிக்கவும் எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது' என, தெரிவித்துள்ளார்.